🕉

ஸ்ரீ பெரியாண்டவர் ஆலயம்

Arulmigu Sri Periyandavar Temple

திருநிலை கிராமம் • Thirunilai Village • Chengalpattu District

திருநிலை கிராமம் காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு வட்டத்தில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலமான திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் ஆலயத்திலிருந்து சுமார் 8 கிமி தொலைவிலும், செங்கல்பட்டிலிருந்து கிழக்கே 14 கிமி தொலைவிலும், திருப்போரூரிலிருந்து மேற்கே 12 கிமி தொலைவிலும் உள்ளது.

திருநிலை ஆலயம் குழந்தைப் பேறு அருளும் ஒரு பரிகாரத் தலம்.

🕐
Temple Hours

காலை 6:00 – இரவு 8:00 Open daily · No midday break

📞
Contact

G. ஏகசீலன் +91 98427 40957

🚌
Bus Routes

T11, T75 & Saraswati Mini Bus From Thirukazhukkundram

Special Events

அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம் மஹாசிவராத்திரி விழாக்கள்

📍

ஸ்ரீ பெரியாண்டவர் ஆலயம் — திருநிலை

Arulmigu Sri Periyandavar Temple, Thirunilai, Tamil Nadu

🚌 திருக்கழுக்குன்றத்தில் இருந்து திருநிலைக்கு பேருந்து தடம் எண் T11, T75 மற்றும் சரஸ்வதி மினி பஸ் வசதி உள்ளது.

Temple Videos

ஆலய காட்சிகள்

ஒவ்வொரு பௌர்ணமி தோறும் ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி
ருத்ராட்ச மரத்தின் அடியில் அமர்ந்து அருள் பாலிக்கும் தவநிலை பெரிய ஆண்டவர்
பெரியாண்டவர் ஆலயத்தின் நுழைவாயில் உள்ள பாவைகள்
வருட பூர்த்தி விழா
  • சிவன், சக்தி ஆகிய இருவரின் அருளும் ஒருங்கே அமையப் பெற்ற திருத்தலம்.
  • பெரியாண்டவர் ஆலய புராண வரலாற்றின்படி சக்தியின் சாபத்தால் சித்தம் கலங்கி பித்தம் பிடித்த நிலையில் ஈசன் உலகை வலம் வந்து திருநிலையில் ஓருநிலையாய் நின்ற இடம்.
  • தாயின் கருவின்றி பெரிய மனிதராக பிறவியெடுத்து ஈசனே உலகை வலம் வந்தபோது பார்வதியால் பெரியாண்டவர் என்று வணங்கப்பட்ட திருத்தலம்.
  • சிவபெருமானின் பாதம் பட்ட தலம்.
  • குழந்தைப் பேறு அருளும் பரிகாரத் தலம்.
  • கலியுகத்தில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஈசன் ஜோதி ரூபமாக காட்சி அளித்து நின்ற தலம்.
  • ஜோதியாக காட்சி தந்த வெட்ட வெளி இடத்தில் சுயம்புலிங்கம் பிரதிஷ்டை செய்து வணங்கி வழிபடும் தலம்.
  • லிங்கத்தின் வலதுபுறம் சிவசக்தி இருவரும் ஒருங்கே அமர்ந்து தெய்வீகக் காட்சி தருகின்ற தலம்.
  • பார்வதி தேவி திருநிலைநாயகி என அழைக்கப்படும் தலம்.
  • சக்தியின் சூலாயுதம் திருநிலையில் வீழ்ந்த போது 21 மண் உருண்டைகள் சிதறி வீழ்ந்து அவை சிவகணங்களாக மாறிய தலம்.
  • சுயம்பு லிங்கத்தைச் சுற்றி சிவகணங்கள் மண் உருக்கொண்டு இறைவனை பூஜிக்கும் தலம்.
  • குளம் மற்றும் ஏரி ஆகிய இரு கரைகளுக்கு மத்தியில் இயற்கை சூழலில் அமைந்துள்ள ஆலயம்.

பல்லவர்களால் புகழ்பெற்ற பல ஆலயங்கள் கொண்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் சைவகுரவர்களால் பாடல் பெற்ற புகழ்மிக்க சிவதலமான திருக்கழுக்குன்றம். இதன் வடகிழக்கே 8 கிமீ தூரத்திலும், முருகன் அசுரர்களை எதிர்த்துப் போர் புரிந்த தலமான திருபோருரில் இருந்து மேற்கு திசையில் 12 கிமீ தூரத்திலும், செங்கல்பட்டில் இருந்து கிழக்கே 14 கிமீ தூரத்திலும், இயற்கை எழில் நிறைந்த, பசும்சோலைகள் சூழ்ந்த, திருநிலை கிராமத்தில் புள்ளினங்கள் இசைபாடும் குளம் மற்றும் ஏரி இருக்கரையின் மத்தியில் சுயம்பு லிங்கமாக தோன்றி சிவபெருமான் பெரியாண்டவர் என்ற நாமத்துடன் வீற்றிருந்து அருள்பாளிக்கின்றார்.

மனிதனாக வந்து மக்களை காக்கும் மகேசன் — சிவபெருமானே மனிதவடிவம் தாங்கி உலகலாம் வலம் வந்து திருநிலையில் ஒருநிலையாய் தன்பாதத்தை பதித்து நின்று பெரியாண்டவர் என்ற நாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகின்றார். இவ்வாலயத்தில் எம்பெருமானை சுற்றி 21 சிவகணங்கள் கைகூப்பி வணங்கி நிற்கும் காட்சி இவ்வாலயத்தை தவிர வேறு எங்கும் காணமுடியாத அரிய காட்சியாகும்.

முன் ஒரு காலத்தில் சுந்திரபத்திரன் என்ற அசுரன் சிவபெருமானை வணங்கி பல அரிய வரங்கள் பெற்றான். அவற்றுள் முக்கியமானது அவனது மரணம் சிவசக்தி சொரூபமானவரால் மட்டுமே நிகழ வேண்டும் என்பது. இந்திரன் முதலான தேவர்களை விரட்டியடித்து அவர்களின் ஆட்சியை கைப்பற்றி பலவகையில் தொல்லை கொடுத்து வந்தான். தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டு காக்குமாறு வேண்டினர்.

சக்தியின் சாபத்தால் ஈசன் மனித அவதாரம் கொண்டு உலகமெல்லாம் திக்கு திசையின்றி அலைந்து திரிந்தார். பார்வதிதேவி தன் சூலாயுதத்தை வீசி எறிந்தாள். அது பிரகாசமாய் பூமியில் ஓர் இடத்தில் நிலையாய் நின்றது. சூலாயுதம் வீழ்ந்த இடத்தில் இருபத்தி ஓர் மண் உருண்டைகள் சிதறி சிவகணங்களாக மாறி ஜயனின் வருகைக்காக காத்து நின்றன.

சூலாயுத ஒளியைக் கண்டு எம்பெருமான் திருநிலையாய் ஓர் இடத்தில் பாதம் பதித்து ஒருநிலையாய் நின்றார். உமையவள் அவ்விடத்திலேயே வணங்கி நின்றாள். "பெரிய மனிதனாக இவ்வுலகை வலம் வந்த ஆண்டவராகிய நீவிரே இன்று முதல் பெரியாண்டவர் என்று அழைக்கப்படுவீர்" என உமையவள் கூறினாள். தேவர் முதலானோர் "பெரியாண்டவா! பெரியாண்டவா!" எனக் கூறி அழைத்து வாழ்த்தினர்.

மேலும் பார்வதிதேவி, "தாயின் கருவின்றி பெரிய மனிதனாக தோன்றி உலகை வலம் வந்தமையால், இவ்வுலகில் கருவின்றி வாடும் தம்பதியர்க்கு யார் இவ்விடத்தில் உன் நாமம் நினைக்கின்றார்களோ அவர்களுக்கு மழலைகளை வழங்கி அருள் புரியவேண்டும்" என வேண்டினார். இறைவனும் அவ்வாறே நடைபெறும் என அருளினார்.

ஒருநிலையில் திருநிலையாய் நிறுத்திய இவ்விடம் "திருநிலை" என அழைக்கப்படும் என்று கூறிய ஜயன், "உலகை காக்கும் நாயகி உமையவள் என்னை திருநிலையாய் நிலை கொண்டு ஆட்கொண்டதால் இன்று முதல் திருநிலைநாயகி என அழைக்கப்படுவாள்" என்று வாழ்த்தினார்.

நெடுங்காலத்திற்கு முன்பு ஒரு தம்பதியினர் குழந்தைபேறு இல்லாமல் மனவேதனையுடன் வாழ்ந்து வந்தனர். சிவபெருமான் அவர்கள் கனவில் தோன்றி திருநிலைக்கு செல்லும்படி வழிகாட்டினார். ஒரு பன்றி அவர்களுக்கு வழிகாட்ட அவர்கள் அதன் பின்னே சென்று வழிபட்டனர். ஒர் ஆண்டுகழித்து ஆண்குழந்தை பெற்றதாக கோயில் தல வரலாறு கூறுகின்றது.

திருநிலையில் ஒருநிலையாய் நின்று அற்புதங்கள் நிகழ்த்தி அன்பர்களை காத்திடும் இறைவனாக, நெஞ்சாரத் தம்மை பணிந்து வணங்குவோர்க்கு வேண்டும் வரம் வழங்கி, இந்த புவணத்தை காத்து ரட்சிக்கும் எம்பெருமானாக பெரியாண்டவர் விளங்குகிறார்.

வெண்பனி மேகங்கள் விளையாட்டாய் மோதி விளையாடும் மலைகளும், குன்றுகளும் சூழ அடர்ந்த வனங்கள் நிறைந்தும், பூத்துக் குலுங்கும் சோலைகளும், இயற்கை அன்னை இயல்பாக அமர்ந்து வசீகரிக்கும் மாட்சிமை பொருந்திய எழில் நிறைந்த திருநிலை கிராமத்தில் வெட்டவெளியில் குடிகொண்டிருக்கும் இறைவன் ஆலயம் வடபுறம் குளக்கரையும், தென்புறம் ஏரிக்கரையும் கொண்டு கிழக்குமுகம் வாசல் கொண்டு அமைந்துள்ளது.

மூன்று நிலை கோபுரம்

மூவேழு உலகை வலம் வந்த வண்ணம் மும்மலம் அழிப்பவனாம் இவ்வாறாக மூன்று நிலை கொண்டு உயர்ந்து நிற்கும் சிவபெருமான் குடியிருக்கும் இவ்வாலயம் மூன்று நிலை கோபுரத்துடன் அமைந்துள்ளது.

விநாயகர், முருகர்

நுழைவு வாயிலின் இடதுபுறம் தலவிநாயகர் காட்சி தருகிறார். வலதுபுறம் ஆறுமுகமாம், பன்னிரெண்டு கைகளாம், மயில் மீதமர்ந்த வேலவனாம் முருகப் பெருமான் அமர்ந்து அருளாசி வழங்குகின்றார்.

16 கால் மண்டபம்

16 கால் மண்டப நுழைவு வாயிலில் உள்ளே நுழைந்தால் நேரே வீபூதி விநாயகரை தரிசனம் செய்யலாம். இவரை விபூதி கொண்டு நாமே அபிஷேகம் செய்தால் செல்வம், கல்வி, அறிவு பெறலாம். இது வேறு எங்கும் காணாத இவ்வாலயத்தின் சிறப்பம்சம்.

பெரியாண்டவர் தோற்றம்

சுயம்பு லிங்கத்தின் மேற்புறம் மனித உருவில் உலகை வலம் வந்த முதற் கடவுளாக, பக்தர்களைக் காத்திட ஒருநிலையாய் திருநிலையில் நின்று பெரியாண்டவராக அமர்ந்து காட்சி தருகின்றார்.

அங்காள பரமேஸ்வரி

சுயம்புவின் வலதுபுறம் உலகை வலம் வந்த சிவபெருமானை ஒருநிலையில் சூலாயுதத்தால் நிறுத்திய அன்னையாக, ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அன்பு பொங்க அருட்காட்சி தருகின்றார்.

சிவகணங்கள்

சுயம்பு லிங்கத்தைச் சுற்றி செவ்வக வடிவில் 21 சிவகணங்கள் இறைவனை வணங்கி நின்று காட்சி தரும் கோலம் வேறு எங்கும் காண முடியாத காட்சியாகும்.

நாகாத்தம்மன் சன்னதி

ஆலயத்தின் வடபுறம் அமைந்துள்ள சித்தாமிர்த குளத்திற்கு செல்லும் வழியில் விநாயகர், முருகர் இருபுறமும் இருக்க நாகாத்தம்மன் கிழக்கு நோக்கு அமர்ந்த கோலத்தில் அருட்காட்சி தருகிறாள்.

  • ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் மாலை 5 மணி முதல் சிறப்பு வழிபாடுகளும் அர்ச்சனை, ஆராதனை நடைபெற்று வருகின்றன. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகின்றது.
  • மகா சிவராத்திரியை முன்னிட்டு மாலை 4 மணிமுதல் தேவார இசையுடன் தொடங்கி இரவு 6 மணி அளவில் பெரியாண்டவர் அங்காளபரமேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் தோன்றி ஆலய வீதிவுலா வந்து அருளுதல் நடைபெறும்.
  • கார்த்திகை மாத தீபம் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.
  • ஜப்பசி மாத பௌர்ணமி அன்று அன்னாபிஷேகம் சிறப்பான முறையில் நடைபெறும்.
  • ஜனவரி முதல் தேதி மற்றும், தமிழ் புத்தாண்டு சித்திரை முதல் நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
  • செப்டம்பர் 12 அன்று ஒவ்வொரு வருடமும் பெரியாண்டவர் அங்காளபரமேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் தோன்றி பால் அபிஷேகம் விழா நடைபெறும்.
  • குழந்தை வரம் வேண்டி பலன் பெற்ற பல குடும்பங்கள் துலாபாரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

சக்தியின் சூலாயுதம் திருநிலையில் வீழ்ந்த போது 21 மண் உருண்டைகள் சிதறி வீழ்ந்து அவை சிவகணங்களாக மாறிய தலம். சிவகணங்கள் மண்ணில் இருந்து தோன்றி ஈசனை மண் உருகொண்டு வணங்கி அருள் பெற்றது போல் நாமும் 21 மண் உருண்டைகள் பிடித்து, சிலையின் முன்புறம் செவ்வக வடிவில் அடுக்கி வைத்து, ஒவ்வொன்றுக்கும் அபிஷேகம் செய்து, கற்பூர ஆராதனை காட்டி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ஒவ்வொரு பெளர்ணமி தினத்தில் மாலைப் பொழுதில் சிறப்பு அபிஷேகமும், அர்ச்சனை, ஆராதனைகளும் நடைபெற்று வருகின்றன. பூஜை முடிந்தவுடன் அன்னதானமும் இங்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை வேளையில் சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.

அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், மஹாசிவராத்திரி விழக்களும் இங்கு மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.

சக்தியின் சூலாயுதம் திருநிலையில் வீழ்ந்த போது 21 மண் உருண்டைகள் சிதறி வீழ்ந்து அவை சிவகணங்களாக மாறிய தலம். திருநிலையில் சிவகணங்கள் மண்ணில் இருந்து தோன்றி ஈசனை மண் உருகொண்டு வணங்கி அருள் பெற்றது போல் நாமும் 21 மண் உருண்டைகள் பிடித்து சிலையின் முன்புறம் செவ்வக வடிவில் அடுக்கி வைத்து ஒவ்வொன்றுக்கும் அபிஷேகம் செய்து கற்பூர ஆராதனை காட்டி அருள் பெருவதால் எல்லா வளமும் பெற்று நல்வாழ்வு பெறலாம்.

பெரியாண்டவர் சிவகண பூசை செய்ய விரும்பும் குடும்ப அங்கத்தினர் முதலில் பெரியாண்டவர் ஆலயத்திற்கு வருகை தந்து ஆண்டவனை முதலில் வணங்கி இறையன்பர்களின் குடும்பத்தினருடன் சித்தாமிர்த குளத்தில் தங்களை நீரினால் சுத்தம் செய்துகொண்டு பெரியாண்டவர் மற்றும் அங்காளபரமேஸ்வரி கலசம் உருவாக்க வேண்டும்.

முதல் மட்டை தேங்காய் வைக்கப்பட்ட கலசத்தில் மஞ்சள் குங்குமம் இட்டு வெள்ளை துண்டு அணிவித்து பெரியாண்டவராக ஆவாகனம் செய்யவேண்டும். இரண்டாவது கலசம் வேப்பிலையால் கரகம் செய்து உச்சியில் எலும்பிச்சைபழம் செருகி மஞ்சள் குங்குமம் இட்டு கதம்ப மலரால் கரகத்தை அலங்கரித்து சிகப்பு கலர் ஆடை கொண்டு அணிவித்து அங்காளபரமேஸ்வரியாக ஆவாகனம் செய்யவேண்டும்.

இருபத்திஓர் சிவகணங்களுக்கு அருகில் மண் அகல் விளக்கு கொண்டு திரி ஏற்றி வைக்கப்படவேண்டும். காரணம் இறைவன் ஜோதிவடிவம் காட்டி சுயம்புவாய் அமர்ந்து அருள்வடிவம் கொண்டு அன்பர்களை காப்பதினால்.

பூசை பொருட்களான எண்ணெய், சியக்காய்த்தூள், பால், தயிர், கதம்பத்தூள், தேன், எலும்பிச்சைபழம், இளநீர், பன்னீர், சந்தனம் கொண்டு தங்கள் உறவினர்கள் சுற்றம் சூழ சிவகணங்களுக்கு அபிஷேகம் செய்யப்படவேண்டும்.

இவ்வாறு பூஜை செய்வோருக்கு பெரியாண்டவர் சகல செளபாக்கியங்களும் வழங்குவார் என்று வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.

மஞ்சள் 100 கிராம்
குங்குமம் 100 கிராம்
சந்தனம் 2 டப்பா 
கற்பூரம் 250 கிராம்
சாம்பிராணி 100 கிராம்
கதம்பத்தூள் 100 கிராம்
நல்லென்ணெய் 1 கிலோ
நெய் 100 கிராம்
அவல் பொறிகடலை 150 கிராம்
விபூதி [500 கிராம்]
சியக்காய் தூள் [2 பாக்கட்]
தேன் 50 கிராம் (2 பாட்டில்)
பன்னீர் (2 பாட்டில்) 
ஊதுபத்தி பாக்கட் இரண்டு 
வெட்டிவேர் 5 ரூபாய்
திரிநூல் ஒன்று  
தீப்பெட்டி ஒன்று
கலசநூல் உருண்டை இரண்டு
பிள்ளையார் துண்டு 
தேங்காய் 20
இளநீர் 2
கல்யாண பூசணிக்காய் 1
எலும்பிச்சை பழம் 6
பூமாலை 6
கதம்ப பூ 20 முழம்
வாழைப்பழம் 50
வாழை இலை [நுனி] 15
பச்சரிசி 1 கிலோ
வெல்லம் 1 கிலோ
பஞ்சாமிர்தம் 5 பழவகைகள்
வெற்றிலை பாக்கு 20 ரூபாய்
தயிர் 1/2 லிட்டர்
பால் 1 லிட்டர்

கொண்டை கடலை, அன்னதான பிரசாதம், வடை, பாயாசம் வீட்டிலிருந்து தயார் செய்துகொண்டு வரவும்.

மஞ்சள் 50 கிராம்
குங்குமம் 50 கிராம்
சந்தனம் 1 டப்பா 
கற்பூரம் 25 கிராம்
கதம்பத்தூள் 50 கிராம்
நல் லென்ணெய் 200 கிராம் 
நெய் 100 கிராம்
அவல் பொறிகடலை 150 கிராம்
விபூதி [500 கிராம்]
சியக்காய் தூள் [1 பாக்கட்]
தேன் 50 கிராம் (1 பாட்டில்)
பன்னீர் (1 பாட்டில்) 
ஊதுபத்தி பாக்கட் ஒன்று  
வெட்டிவேர் 5 ரூபாய்
திரிநூல் ஒன்று  
தீப்பெட்டி ஒன்று
கலசநூல் உருண்டை இரண்டு
பிள்ளையார் துண்டு ஒன்று 
தேங்காய் 2
இளநீர் 2
எலும்பிச்சை பழம் 3
பூமாலை 2
கதம்ப பூ 5 முழம்
வாழைப்பழம் 10
வாழை இலை [நுனி] 1
பச்சரிசி 1 கிலோ
வெல்லம் 1 கிலோ
பஞ்சாமிர்தம் 5 பழவகைகள்
வெற்றிலை பாக்கு 5 ரூபாய்
தயிர் 1/2 லிட்டர்
பால் 1 லிட்டர்
ஆக்கம்: திரு. கண்ணப்பன், ஆசிரியர், மானாம்பதி
திருநீற்றை மருந்தாக்கி
உறுநோயை போக்கிட்ட
குருவான பெரியாண்டவா
கருக்கொள்ள வரம் வேண்டி
வருகின்ற மாந்தர்க்கு
தருகின்றாய் மகவல்லவா

விதிதன்னின் வலியாலே
விழிசோர்ந்து அழுவோர்க்கு
வழிகாட்டி நீயல்லவா
மதிதந்து நிதிதந்து
மனதார அருள்தந்து
மகிழ்வாக எனைப்பாரய்யா

நீர்சூழ்ந்த உலகோரை
நிதம் காக்கும் என்ஈசா
நினையன்றி துணையாரய்யா
ஏர்கொண்டு வாழ்கின்ற
எளியோரின் துயர்போக்க
பொழிகின்ற மழையல்லவா

மனம்நொந்து விழிமூடி
உனைவேண்டி தொழுவார்க்
குமலர்தந்து குறிசொல்லுவாய்
தினந்தோறும் உனையெண்ணி
திருசேர வரம் வேண்டும்
எனையேனோ மறந்தீரய்யா

மணம்வேண்டி தொழுகின்ற
மங்கையரின் உளமேற்க
மாங்கல்யம் தரவேண்டுமே
மகவொன்று தரவேண்டி
மனமேங்கி நிற்போர்க்கு
பகவானுன் அருள் வேண்டுமே

வருந்துன்பம் தடுத்திட்டே
வளமான நிலைசேர்க்கும்
திருநிலையின் பெரியாண்டவா
பெருந்துயரம் எனைத்தீண்டா
பேறெனக்கு தரவேண்டும்
பெரியோனே பெரியாண்டவா

கருவின்றி உருவான
திருவே உன் அருள்கேட்டேன்
வரவேண்டும் தரவேண்டுமே
வருவோரின் துயர்கண்டு
வளம்தந்து நலம்தந்து
பெருவாழ்வு நீ தாருமே

உமையாளின் கோபத்தால்
உருமாறி திரிந்தோடி
திருநிலையில் அமர்ந்தீரய்யா
எமையாளும் ஈஸ்வரனே
எந்நாளும் உனைமறவா
நிலையெனக்கு தருவீரய்யா

வேலாயுதம் கொண்ட
வித்தகனைப் பெற்றவளின் 
சூலாயுதம் ஏற்றவா
சூலாயுதம் தன்னின்
சூட்சுமத்தை நன்றிவேன்
சுகம் தந்து எனைமாற்றவா

பிடிமண்ணாய் உனைவைத்து
பெருவாழ்வு தனைவேண்டும்
பேராசை கொள்வோமய்யா
அடிபோற்றி நின்றோரின்
அகமேற்று நல்வாழ்வை
அளிப்பதுவும் நீர்தானைய்யா

உமையாளை உடன்சேர்த்து
உலகாளும் பெரியோனே
உனைகாண வந்தோமன்றோ
சுமையான இன்னல்களை
சுடர்முன்னே இறக்கிவிட்டோம்
சுகம்யாவும் பெறுவோமன்றோ
ஆக்கம்: திரு அருள்மணி, திருக்கழுக்குன்றம்
திருவிளங்க அருள்வோனே
திருநிலையில் அமர்ந்தோனே
ஒருநிலையில் தான் இருந்து
ஓங்குபுகழ் தருவோனே
பிரியமுடன் உனைப் பணிந்தால்
அரியவரம் தந்தருள்வாய்
பெரியாண்டவா என நினைத்தால்
நிமிடத்தில் வந்தருள்வாய்

நலம்காக்கும் நாயகனே
வளம் சேர்க்கும் தூயவனே
குலம் காக்கும் காவலனே
பலம் சேர்க்கும் மறையோனே
உளமாற பணிந்திட்டால்
உயர்வளிக்கும் பெருமானே
வரும்துன்பம் தனைநீக்கி
பெரும்புகழைத் தருவோனே
உன் பொற்பாதம் பணிகின்றோம்
பெரியாண்டவ பெருமானே